
வெளிநாடு குளிர் கால ஆலாபனைகள். மரங்கள் மஞ்சள் ஆடையில் ஆதவன் ஒளிந்து காணவில்லை. வானமோ அழுது வழிந்தபடி. முக்காடு போட்ட முகமூடி மனிதர்கள். இதுதான் வெளிநாடு... வெளிறிய அவிந்த முகங்கள். ஆணா பெண்ணா அறியமுடியா அறிமுகமற்ற அரை குறை அளவலாவல். காதிருந்தும் கேட்காத வாயிருந்தும் பேசாத நாடு இருந்தும் நாடோடிகளாய் நாம். திட்டுகிறானா பேசுகிறானா அணைக்கிறானா அழைக்கிறனா புரியாத புதிய பத்துப் பாஷைகள். இதுதான் வெளிநாடு... நாய்க்கு உணவா நமக்கு உணவா நாலு பாஷையில் எழுதியிருந்தும் புரியவில்லை யாருக்கு என்று. பனியில் உறைகிறோமா மழையில் குளிக்கிறோமா மூக்கும் காதும் விறைத்துவிட பாதத்தில் பாரமாய் பாதணிகளைச் சுமந்தபடி. மனம் விம்மினாலும் பணம் பணம் என்று பிணமாய் திரிகிறோம். மாத முடிவில் மொத்தமாய் கட்டுகின்ற வீட்டு வாடகை முதல் காப்புறுதிகள் வரை. மிஞ்சுவதோ மொய் எழுத. இதுதான் வெளிநாடு... மின்சார மயத்தில் இரவும் பகலும் கூட இரவல் பொழுதாகி மணிக்கூட்டு முட்களோடு நாமும் முண்டி ஓட தொலைந்த நேரங்கள் கலைந்த நின்மதிகள் வராத வசந்தங்கள் தேடினாலும் கிடைக்காமல் தூர நின்று கை காட்டும். வெளிநாடாம் இது! இங்குதான் சொர்க்கமாமே! சொந்த நாட்டில் சுகங்களைத் தொலைத்துவிட்ட பரதேசிகள் நாம். ஈழத் தமிழனின் விதியில் திணித்துவிட்ட சங்கதியில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment